புகலிடக்கோரிக்கையாளர்களை வருத்துவதில் பிரித்தானிய பிரதமருக்கும், உள்துறைச் செயலருக்கும் போட்டியே நடக்கிறது எனலாம்.
ஒரு காலத்தில் புகலிடக்கோரிக்கையாளர்களாக பிரித்தானியாவுக்குள் நுழைந்தவர்களின் வம்சாவளியினரான இந்த இருவரும், இப்போது புலம்பெயர்வோரை ஒடுக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதுபோல் தெரிகிறது.
கர்ப்பிணிகள் குழந்தைகள் வயிற்றில் அடிக்கும் பிரித்தானிய உள்துறைச் செயலர்
புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரித்தானியாவில் புகலிடம் கோரும் நிலையில், அவர்கள் ஒரு ஆண்டுக்கு பணி செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ஆகவே, பெரும்பாலான புகலிடக்கோரிக்கையாளர்கள் அரசு தரும் சிறு உதவித்தொகையை நம்பித்தான் வாழ்ந்தாகவேண்டிய நிலை உள்ளது.
வீடு ஒன்றில் சில புகலிடக்கோரிக்கையாளர்கள் சேர்ந்து தங்கும் நிலையில், அவர்களுக்கு வாரம் ஒன்றிற்கு 45 பவுண்டுகளும், ஹொட்டல் ஒன்றில் தங்கினால் அவர்களுக்கு வாரம் ஒன்றிற்கு 9.10 பவுண்டுகளும் உள்துறை அலுவலகத்தால் வழங்கப்படும்.
அப்படி அவர்கள் வாய்க்கும் வயிற்றுக்குமாக போராடி வரும் நிலையில், கர்ப்பிணிகள் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் அவர்கள் வயிற்றில் அடித்துள்ளார் பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன்.
ஆம், கர்ப்பிணிகள் மற்றும் ஒன்று முதல் மூன்று வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, சத்துள்ள உணவு வழங்குவதற்காக கொடுக்கப்படும் 3 பவுண்டுகளைக் கொடுக்காமல் நிறுத்திவைத்துள்ளார் சுவெல்லா.
நீதிமன்றம் அதிரடி
இப்படி சரியான உணவு இல்லாமல் குழந்தைகள் மெலிந்துபோன நிலையில், ஐந்து புகலிடக்கோரிகையாளர்கள் இந்த விடயத்தை நீதிமன்றம் கொண்டு சென்றுள்ளார்கள்.
வழக்கை விசாரித்த நீதிபதியான Sir Jonathan Mark Swift, கர்ப்பிணிகள் மற்றும் ஒன்று முதல் மூன்று வயது வரையுள்ள குழந்தைகளுக்கு சத்துள்ள உணவு வழங்குவதற்காக கொடுக்கப்படும் 3 பவுண்டுகளைக் கொடுக்காமல் நிறுத்திவைத்துள்ள விடயத்தில், உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன் சட்டத்தை மீறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆகவே, ஆயிரக்கணக்கான கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு, நிறுத்திவைக்கப்பட்டுள்ள அந்த உதவித்தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என்று கூறியுள்ள நீதிபதி, இந்த நிதியுதவிக் கோரிக்கைகளை பரிசீலிக்க நீண்ட தாமதம் ஆவதாகவும், ஆகவே, உள்துறைச் செயலர் செயல்படுத்திவரும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு நிதி வழங்கும் நடைமுறை சட்டப்படியானது அல்ல என்றும் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.