லுகான்ஸ்க் அருகே உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலில், ரஷ்ய வீரர்கள் நால்வர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கீவ் மீது தாக்குதல்
ரஷ்யா-உக்ரைன் நாடுகள் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. நேற்று முன்தினம் கீவ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியானதாக கூறப்பட்டது.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அங்குள்ள கட்டிடம் ஒன்று சேதமடைந்தது.
இந்நிலையில், ரஷ்ய ஆக்கிரமிப்பு மாகாணமான லுகான்ஸ்க் அருகேயுள்ள கர்பாட்டி எனும் கிராமத்தில் உக்ரைன் ராணுவம் குண்டுமழை பொழிந்துள்ளது.
ரஷ்ய வீரர்கள் 4 பேர் பலி
இந்த தாக்குதலில் கட்டிடம் ஒன்று பலத்த சேதமடைந்த நிலையில், அதில் இருந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
ரஷ்ய வீரர்கள் கோழி பண்ணை ஒன்றில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்த பின்னரே உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிய வந்துள்ளது.
முன்னதாக, தெற்கு ரஷ்யாவில் உள்ள கிராஸ்னோடர் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீப்பிடித்தது. அதன் அருகே ட்ரோன் ஒன்று விழுந்தது குறிப்பிடத்தக்கது.