கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளை தபாலில் அனுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளை அதிபர்களுக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளை அவர்களது தனிப்பட்ட முகவரிகளுக்கும் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கூறியுள்ளார்.
பரீட்சை அனுமதி அட்டையிலுள்ள பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், பிறந்த திகதி, விண்ணப்பித்த பாடங்கள் மற்றும் மொழிமூலத்தில் மாற்றம் இருக்குமாயின் அல்லது புதிதாக ஏதாவது விடயத்தை சேர்க்க வேண்டுமாயின் அதனை Online ஊடாக மேற்கொள்வதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த திருத்தங்களை எதிர்வரும் 24 ஆம் திகதி நள்ளிரவு வரை மேற்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், மாநாடுகள், முன்னோடி பரீட்சைகள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, முன்னோடி பரீட்சைக்குரிய வினாத்தாள்களை அச்சிடுதல், பகிர்ந்தளித்தல், கையேடுகளை விநியோகித்தல், இலத்திரனியல் ஊடகங்களினூடாக தகவல்களை பரிமாறுதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பொலிஸ் தலைமையகத்திற்கோ அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் ஜூன் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதேவேளை, பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தமக்கான தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கவில்லையாயின், பிரதேச செயலகத்தில் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பப்படிவங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு, பாடசாலை அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பிரதேச செயலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பட்ட போதிலும், இதுவரை தேசிய அடையாள அட்டை கிடைக்காதிருந்தால் அது தொடர்பில் ஆட்பதிவு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்காக 0115 22 61 00 அல்லது 0115 22 61 26 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்து தேசிய அடையாள அட்டை தொடர்பான தகவல்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.