லோகேஷ் கனகராஜ் 37 வயதை எட்டியிருக்கிறார். லோகேஷ் தமது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து எடுத்துக் கொண்ட படமொன்றை பகிர்ந்துள்ளார்.
மிகப் பெரிய வசூல் வேட்டையை நடத்திய விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு, தற்போது லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். மிகக் குறைவான திரைப்படங்களையே இயக்கியிருந்தாலும் அவர் லோகேஷ் கனகராஜ் தமிழ்த் திரையுலகில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப் பெரியது.
2017ஆம் ஆண்டில் சந்தீப் கிஷனும் ஸ்ரீயும் நடித்து மாநகரம் என்ற படம் வெளியானபோது, முதல் சில நாட்களுக்கு அந்தப் படத்தை யாரும் பெரிதாகக் கவனிக்கவில்லை. ஆனால், அந்த வார இறுதியில், அந்த வருடம் வெளியான முக்கியமான படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் எனத் தெரிந்துவிட்டது. ரஜினிகாந்த், சூர்யா போன்றவர்கள், அந்தப் படத்தைப் பாராட்டினார்கள்.
அடுத்த வாரம் துவங்கியபோது, அந்தப் படம் ஓடும் திரையரங்குகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கப்பட்டது. அப்போதுதான் கோலிவுட், ‘யாரு இந்த லோகேஷ் கனகராஜ்?’ என்று பேச ஆரம்பித்தது.
இந்தப் படம் ஒட்டுமொத்தமாக பெருந்தொகையை வசூலித்தது. இந்தப் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு என யாருக்கும் துல்லியமாகத் தெரியாது என்றாலும், படத்தின் தயாரிப்புச் செலவைவிட, பல மடங்கு அதிகமாக இந்தப் படம் வசூல் செய்தது. இந்தப் படம் இந்தியிலும் மும்பைக்கர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.