கனடாவில் போதைப் பொருள் கடத்தல்காரர் ஒருவரிடமிருந்து பொலிஸார் பணம் கொள்ளையிட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஒருவர் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவிராந்தின் அடிப்படையில் பொலிஸார் அவரது வீட்டை சோதனையிட்டுள்ளனர்.
சோதனையின் போது சந்தேக நபரிடமிருந்து போதைப் பொருட்கள், மற்றும் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
எனினும், மீட்கப்பட்ட மொத்த பணத்தையும் பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
றொரன்டோ பொலிஸார் சுமார் 6000 டொலர் பணத்தை களவாடியிருக்கலாம் என ஒன்றாரியோ நீதவான் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 19390 டொலர் பணம் மீட்கப்பட்டிருந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், தம்மிடமிருந்து மீட்கப்பட்ட பணம் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை விடவும் 6000 டொலர்கள் அதிகம் என சந்தேக நபரான அன்ட்ரூ ரொச்சா தெரிவித்துள்ளார்.
வீட்டை சோதனையிட்ட போது மீட்கப்பட்ட பணம் குறித்த புகைப்படங்களின் மூலமும் பணம் கொள்ளையிடப்பட்ட விவகாரம் அம்பலமாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.