1983 ஜூலை 25 ஆம் திகதி கரவெட்டி முழுவதும் அந்த சோகமான செய்தி பரவியது!
ஏற்கனவே கொழும்பிலிருந்து வந்த ‘காயமான’ செய்திகளில் ‘வேலைப்பாய்ச்சியது’ போல அந்தச் செய்தியும் வந்தது
வெலிக்கடையில் இருந்த கைதிகள் படுகொலை செய்யப்பட்டுவிட்டனராம். சின்னராசா சுவாமியுமாம் என்ற தகவல் தான் அது.
கரவெட்டியிலுள்ள அவர்களது வீட்டில் உறவினரும் அயலவரும் அயலூராரும் குவிந்தனர். மரணவீடாகவே அன்று அது அழுது நிறைந்தது.
இன்று 27/02/23 மதியம் தொலைபேசியில் வடமராட்சியின் மூத்த ஊடகவியலாளர் தில்லை அண்ணர் ” தம்பி, கரவெட்டியில் பரபரப்புச் செய்தி பாதர் சின்னராசா கனடாவில் காலமாகி விட்டாராம் ; ஆலயத்தில் சோக மணி ஒலிக்கப்பட்டதாம்” என்று சொன்ன போது வந்த நினைவலைகளில் அந்த 83 நாள் நினைவு முக்கியமான ஒன்று.
சில மாதங்களுக்கு முன் ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளருடன் எதிர்வரும் ஜூலை மாதம் வெலிக்கடை இனப்படுகொலை நாற்பதாவது ஆண்டை முன்னிட்டு சின்னராசா அவர்களிடமும் ஒரு பேட்டியை ஒழுங்கு செய்யலாம்- எனச் சொல்லியிருந்தேன். ஆனால், சில தினங்களுக்கு முன், எனது உறவினரும் அருடதந்தையுமான ஜெயக்குமார் அடிகள் சின்னராசா அவர்களின் உடல் நிலை பற்றிய சோகமான தகவலைப் பகிர்ந்தார்.
வெலிக்கடைப் படுகொலையை ஆவணமாக நினைவுபடுத்த இன்று சிலரே நம்மத்தியில் உள்ளனர். அவர்களும் போக…யாவும் காற்றோடு கலந்த கதையாகப் போய்விடும்.
தில்லை அண்ணர் சின்னராசா பற்றிச் சொன்னதோடு- சின்னராசா எனது தமையனார் சுபேந்திரனின் நல்ல நண்பர் என்பதையும், அவர் குருத்துவப் பட்டம் பெற்று கரவெட்டி வந்தபோது அந்த விழாச் செய்தியைத் தாம் வீரகேசரிக்கு அனுப்பியதையும் நினைவு கூர்ந்தார்.
அண்ணாவும் அவரும்- நாதஸ்வரக் கலைஞர் ஷேக் சின்னமௌலானா கரவெட்டி அத்துளுவுக்கு வந்தபோது- இவர்கள் சைக்கிளில் போனபோது நானும் சைக்கிள் முன்” பாரில்” இருந்து போனதும் நினைவில் வருகிறது.
கலாரசிகரான அவரது தந்தையார் சிறந்த ஆர்மோனியக் கலைஞர். தேவாலயத்தில் லத்தீன், தமிழ் இரண்டிலும் பாடுவதில் விண்ணர்.
இலங்கை வானொலியில் பணியாற்றி காணாமல் ஆக்கப்பட்ட குகமூர்த்தி அண்ணர் என்னுடன் நெருக்கமாகப் பழககக்காரணமானவர் பாதர் சின்னராசா என்பேன்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாலிருந்த ரூபவாஹினியில் பணியாற்றிய நான் அவரைச் சந்தித்த வேளையில் எனது ஊரைச் சொன்னபோது அவர் என்னிடம் முதற் கேட்ட கேள்வி “பாதர் சின்னராசாவைத் தெரியுமா? ” என்பதே.
அவருடனான எனது உறவு முறையைச் சொன்ன பின்னர் குகமூர்த்தி அண்ணனின் நட்பின் நெருக்கம் அதிகரித்தது. நாலாம் மாடி வரையும் எனனைப் போகவும் வைத்தது.
1981 ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரியூட்டப்பட்டு ஊரடங்குச் சட்டம் அமுலாகியிருந்த வேளையில் ஒரு பாதர் யாழ் நூலகத்தில் எரிக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள் நூல்கள் தொடர்பான விபரங்களை ஒரு நூலாகத் தொகுத்து அச்சிட்டு வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் இராஜதந்திரிகளுக்கும் சேரும் வகையில் கொழும்புக்கு அனுப்பும் பணியைச் செய்தாராம்.
ஊரடங்குச் சட்டம்; வீதியெங்கும் படைகளும் பொலிசாரும் காவலில் நின்றபடி!
இரவோடிரவாக கொழும்பு சென்ற முக்கியத்தர் ஒருவருடன் அந்த அச்சுப் பிரதிகளும் கொழும்புக்குச் சென்றன.
குகமூர்த்தி சொன்ன அன்றைய பாதர் தான் அமரர் பிலிப் சின்னராசா அவர்கள்.
நீர்வேலி வங்கிக் கொள்ளையில் சின்னராசாவுக்கு தொடர்பிருந்ததோ இல்லையோ அவரது இனநலனுக்கான செயற்பாடுகளே அவர் மீதான கைதுக்கு காரணமாயின.
பாதர் சிங்கராயர் தம்மிடம் இளைஞர்கள் தந்த பணத்தைப் பிரித்து தமிழர் உரிமை விடயத்தில் ஆர்வமுள்ளவர்களாகத் தமக்குப் பட்ட நான்கு குருமார்களிடம் கொடுத்து அதனை வங்கிகளில் இட்டு வைக்குமாறு கேட்டிருந்தார்.
அவர்களில் ஒருவர் தான் அன்றைய அருட்பிதா. சின்னராசா.
பத்திரிகைகளில் வந்த வண. சிங்கராயரின் உரைகள், பிரசங்கங்கள் தொடர்பாக நோட்டம் விட்ட அன்றைய இரகசியப் பொலிசார் அவரது அறையைச் சோதனையிட்டபோது ஏனைய “பாதர்மாரின்” வங்கி ரசீதுகள் கைப்பற்றப்பட்டன.
சிங்கராயர் குருநகர் வதை முகாமில் விசாரிக்கப்பட்டார். விசாரித்த அதிகாரி நேரே ஆயரிடம் வந்து “கொலைகளும் இணைந்த கொள்ளை ஆயர்!” என்று சொன்னாராம்.
குருமார்களைக் கைது செய்ய வேண்டாம் எனவும் அவர்களைத் தாமே கொண்டு வந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அன்றைய யாழ் ஆயர் தியோகுப்பிள்ளை விடுத்த கோரிக்கையை அன்றைய தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி செவிமடுக்கவில்லை.குருமார் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
பிணையில் பின்னர் விடப்பட்டபோது ஒருவர் வெளிநாடு சென்று தொழில் நிமித்தமாக வேறு ஒரு கிறிஸ்தவ சபையில் “பாஸ்டர்” ஆனார்.
மற்றவர் குற்றமற்ற நிலையிலோ எனனவோ விடுதலையானார்.
வண. பிதா சிங்கராயரும் சின்னராசாவுமே சிறைத் தண்டனையை அனுபவித்தனர்.
வெலிக்கடைக் கோரத்தைத் தொடர்ந்து, மட்டுநகர் சிறைக்கு கைதிகள் மாற்றப்பட்ட பின்னர், அங்கிருந்து மீண்டும் வெலிக்கடைக்கு மாற்றப்படுவார்கள் என்ற செய்திகள் வந்தபோது கைதிகள் இயக்கங்களால் கடத்தப்பட்டு இந்தியாவுக்கு அனுபப்பட்டனர்.
நாமே நடத்தினோம்; நாமே கடத்தினோம் என்ற இயக்கங்களின் பிரசுரப் போரும் அக்காலத்தில் பின்னர் இடம்பெற்றது.
‘பாதர்”சிங்கராயர் மட்டுமே அவர்களுடன் போகாமல் இருந்தார்.
செய்திகளில் வந்தது போல அவர் மீண்டும் வெலிக்கடைக்கு மாற்றப்பட்டார்.
சின்னராசா அவர்கள் இந்தியா சென்று பின்னர் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தார்.
இவை இன்றைய நாளில் இவரை அறியாதவர்களுக்காக பதியப்படவேண்டிய தகவல்களே.
இன்று நாம் தான் போராளி. மற்றவர்கள் துரோகி. நாம் தான் போராட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் என முழங்கும் பலரும் கடந்த காலங்களை இன்றைய நாளில் அறியவேண்டியது அவசியம்.
வெலிக்கடையில் கொலையாளிகளை எதிர்க்கும் போதும் மட்டக்களப்பில் கைதிகளைக் கடத்தும் போதும் “ஒற்றுமை” என்ற சொல் எங்கிருந்தோ வந்து எம்மவரை இறுகப் பற்றியிருந்தது மெய்.
அமரர் சின்னராசா இறுதிவரை சமூகத்தின் நலனுக்காக பல நற்காரியங்களைச் செய்து வந்துள்ளார்.
அவர் நிம்மதியான உறக்கத்தை என்றும் அடைவாராக!