வங்காளதேசம் நாட்டில் கப்பலுக்கான கண்டெய்னர்கள் பாதுக்காக்கப்பட்ட பகுதியில் 15 வயதேயான ஃபாஹிம் என்ற சிறுவன் தமது சக நண்பர்களுடன் கண்ணாமூச்சி ஆடியுள்ளான்.
அவனது சத்தம் வெளியே கேட்கவில்லை
ஒருகட்டத்தில் கண்டெய்னர் ஒன்றில் நுழைந்த சிறுவன் அசதியால் தூங்கியும் போயுள்ளான். ஆனால் தூக்கத்தில் இருந்து கண்விழித்த சிறுவன் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளான்.

அந்த கண்டெய்னருடன் தாம் எங்கேயோ சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த சிறுவனுக்கு பயம் தொற்றிக்கொள்ள, காப்பாற்ற வேண்டும் என கதரியுள்ளான். ஆனால் அவனது சத்தம் வெளியே கேட்கவில்லை.
சிறுவன் மாயமானதை அறிந்த குடும்பத்தினர், உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். மட்டுமின்றி, சிறுவனை ஆட்கடத்தல் குழு ஏதும் கடத்தியிருக்கலாம் என்றே குடும்பத்தினர் அஞ்சியுள்ளனர்.
ஜனவரி 12ம் திகதி தவறுதலாக கப்பல் கண்டெய்னர் ஒன்றில் சிக்கிய சிறுவன், இறுதியில் 2000 மைல்களுக்கு அப்பால் மலேசிய துறைமுகமான Klang-ல் மீட்கப்பட்டுள்ளான்.
ஜனவரி 17ம் திகதி Klang துறைமுகத்தை சென்றடைந்த அந்த கப்பலில், ஒரு கண்டெய்னரில் இருந்து விசித்திர சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அந்த கப்பலின் ஒரு ஊழியர் முன்னெடுத்த நடவடிக்கையால் பொலிசாரின் உதவியுடன் சிறுவனை விடுவித்துள்ளனர்.
உணவு, தண்ணீர் இன்றி தவித்துப் போன சிறுவன்
நீண்ட ஒருவார காலம் உணவு, தண்ணீர் இன்றி தவித்துப் போன சிறுவன், அந்த கண்டெய்னரில் இருந்து மீட்கப்படும் போது காய்ச்சல் காரணமாக நடுக்கத்தில் இருந்துள்ளான்.
இதனையடுத்து Klang நகரில் உள்ள மருத்துவமனையில் அதிகாரிகளால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளான். விசாரணை முன்னெடுத்த நகர காவல்துரை அதிகாரி, இதில் எந்த மர்மமும் இல்லை எனவும், ஃபாஹிம் உயிருடன் மீட்கப்பட்டது ஒரு அதிசயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறுவன் தவறுதலாக கண்டெய்னர் ஒன்றில் நுழைந்து, அசதியில் தூங்கிப்போனது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். இதனிடையே, மலேசிய உள்விவகார அமைச்சர் தெரிவிக்கையில், சிறுவன் உடனடியாக தனது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவான் என குறிப்பிட்டுள்ளார்.