டி20 உலகக் கோப்பையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்திய அணி தனது குரூப் ஆட்டங்களில் பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்தை வீழ்த்தி 6 புள்ளிகளைப் பெற்றது.
அதே சமயம் பரபரப்பான ஒரு ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றது. இதனால் குரூப்-2 ல் இந்திய அணி 2 வது இடத்தில் உள்ளது.
இப்போது அரையிறுதியில், மகளிர் கிரிக்கெட்டில் சக்தி வாய்ந்த அணியான ஆஸ்திரேலியாவை இந்தியா சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பே, ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெல்லும் மிகப்பெரிய போட்டியாளர்களாக கருதப்பட்ட மூன்று அணிகளில் இந்திய அணியும் ஒன்று.
கோப்பையை வெல்ல இறுதிப் போட்டிக்குள் நுழைவது அவசியம். இப்போது அதற்கு ஒரு படி மட்டுமே மீதமுள்ளது.
ஹர்மன்பிரீத் கெளர் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வருவதற்கு, ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை வென்றாக வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல.
எனவே டீம் இந்தியா அதிக நம்பிக்கை வைத்திருக்கும் வீராங்கனைகள் பற்றி பேசலாம்.
இவர்களில் சிலர் அரையிறுதியில் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்துவார்களேயானால், வலுவான கிரிக்கெட் வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணியை கடந்து செல்வது அவ்வளவு சிரமமாக இருக்காது.
பேட்டிங்கில் ஹர்மன்ப்ரீத் புரிந்த சாதனை
அயர்லாந்துக்கு எதிரான பந்தயத்தில், மகளிர் கிரிக்கெட்டில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர் புரிந்த சாதனை பற்றிப்பேசுவோம்.
அந்தப்போட்டியில் ஹர்மன்ப்ரீத் கெளர் 13 ரன்கள் எடுத்து, மகளிர் டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்த சாதனை படைத்த முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை இவர்தான்.
இவருக்கு முன் மூன்று வீராங்கனைகள் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையை நியூசிலாந்தின் சூஜி பேட்ஸ் படைத்துள்ளார். இந்த வலது கை ஆல்ரவுண்டர் 143 சர்வதேச டி20 போட்டிகளில் 3820 ரன்கள் எடுத்துள்ளார். இந்த டி20 உலகக் கோப்பையிலும் சூஜி பேட்ஸ் நான்கு இன்னிங்ஸ்களில் 137 ரன்கள் குவித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேக் லைனிங் 130 போட்டிகளில் 3346 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மறுபுறம், ஹர்மன்ப்ரீத் கெளருக்கு சற்று மேலே வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீராங்கனை ஸ்டெபானி டெய்லர் 113 போட்டிகளில் விளையாடி 3166 ரன்கள் எடுத்துள்ளார்.
ஹர்மன்ப்ரீத் கெளர் மூவாயிரம் ரன்களை எடுத்துள்ளார். அதனால் அவருக்கு நிறைய அனுபவம் உள்ளது. ஆனால் இந்த போட்டியில் அவர் இதுவரை அத்தனை சிறப்பாக மட்டை வீசவில்லை.

இதுவரை அவர் 16, 33, 4, 13 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் அதாவது நான்கு இன்னிங்ஸ்களில் 16.50 சராசரியில் மொத்தம் 66 ரன்கள் எடுத்துள்ளார்.
ஹர்மன்பிரீத் தனது 150 டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் சராசரியாக 27.83 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் இந்த உலகக் கோப்பையில் அவர் எடுத்த ஸ்கோர் சராசரிக்கும் குறைவாக உள்ளது.
ஹர்மன்ப்ரீத் இந்திய அணியின் வலுவான அடித்தளமாக இருந்து வருகிறார். மேலும் அரையிறுதியில் அவரது அதிரடி பேட்டிங் அணிக்கு மிகவும் தேவை.
அரையிறுதிக்கு முன்னதாக, அதிகரிக்கும் டாட் பால் தொடர்பாக இந்திய அணி உழைக்க வேண்டும் என்று அயர்லாந்துடனான போட்டிக்குப் பிறகு அவர் கூறினார்.
இங்கிலாந்துக்கு எதிரான தோல்வியின் போது இந்திய அணியின் இன்னிங்ஸில் 51 டாட் பால்கள் இருந்தன. அதாவது அந்த பந்துகளில் எந்த ரன்னையும் அணி எடுக்கவில்லை. அயர்லாந்து அணிக்கு எதிரான டாட் பால் எண்ணிக்கை 41 ஆகும்.
ஒரு சில பேட்டர்களைத் தவிர, ஹர்மன்ப்ரீத் உட்பட எல்லா டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ஸ்ட்ரைக் சுழற்சி சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக அதை மேம்படுத்த ஏதாவது செய்தாகவேண்டும்.

உச்சத்தை அடைந்த மந்தனா
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா 56 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 155 ஸ்டிரைக் ரேட்டில் 87 ரன்கள் எடுத்தார்.
ஸ்மிருதியின் டி20 வாழ்க்கையில் இதுவே சிறந்த ஸ்கோர் ஆகும்.
115 போட்டிகளில் 2800 ரன்களை குவித்த மந்தனாவின் 22வது அரை சதம் இதுவாகும். இங்கிலாந்துக்கு எதிராகவும் அவர் அரைசதம் அடித்தார்.
இந்த உலகக் கோப்பையில் இதுவரை மந்தனா மூன்று இன்னிங்ஸ்களில் 149 ரன்கள் எடுத்துள்ளார், இது இந்த போட்டியில் எந்த வீரரையும் விட அதிகமாகும் அதாவது இந்த உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்த வீராங்கனை என்ற பெருமையை தற்போது மந்தனா பெற்றுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. மந்தனா மீண்டும் அரையிறுதியில் இந்தியாவுக்கு வேகமான மற்றும் வலுவான தொடக்கத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷெஃபாலி வர்மா ஃபார்மில் வருவது எவ்வளவு முக்கியமானது?
இளம் வயதிலேயே கேப்டனாக உலகக் கோப்பையை வென்ற அனுபவம் கொண்ட சில நட்சத்திர கிரிக்கெட் வீரர்களில் ஷெஃபாலி வர்மாவும் ஒருவர். கடந்த மாதம், 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியாவுக்காக அவர் வென்றார்.
அவர் அணியில் தொடக்க ஆட்டக்காரராக உள்ளார். ஸ்மிருதி மந்தனாவின் பேட் ஒரு முனையில் அதிரடியாக உள்ள அதே நேரம் ஷெஃபாலியின் பேட் பெரிய ஸ்கோருக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது.
ஷெஃபாலி ஃபார்மில் வருவது மிகவும் முக்கியம். இந்த பேட்ஸ்மேனுக்கு இருக்கும் பந்தை அடிக்கும் திறன் அணியில் மிகச் சில வீரர்களுக்கே உள்ளது.
தனது செயல்திறனின் பலத்தில் ஷெஃபாலி 2020 இல் ஐசிசி கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். அதே ஆண்டில் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் டாப் ஸ்கோரர் அவர் ஆவார்.
மந்தனா மற்றும் ஷெஃபாலி ஜோடி தொடக்க ஆட்ட ஜோடியாக எவ்வளவு ஆபத்தானது என்பதை அவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் நிகழ்த்திய சாதனையிலிருந்து அறியலாம்.
இதுபோன்ற சூழ்நிலையில் அரையிறுதியில் இந்த ஜோடியிடம் இருந்து வலுவான தொடக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.

ரிச்சா கோஷ் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அடங்கிய மிடில் ஆர்டர்
இப்போது அணியின் மிடில் ஆர்டருக்கு வருவோம். கேப்டன் ஹர்மன்பிரீத், ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியோரின் தோள்களில் இந்தப்பொறுப்பு உள்ளது.
ஹர்மன்ப்ரீத் பற்றி ஏற்கனவே பார்த்துவிட்டோம்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் அரைசதம் (53 ரன்கள்) அடித்து ஜெமிமா ஆட்டநாயகி ஆனார். இருப்பினும், அடுத்த மூன்று பந்தயங்களில் 1, 13 மற்றும் 19 ரன்கள் மட்டுமே அவர் எடுத்தார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் தொடக்க ஆட்டக்காரராக டி20 யில் அறிமுகமான ஜெமிமா, தற்போது முதல் விக்கெட் வீழ்ந்த பிறகு ஆடுகளத்திற்கு வருகிறார். அதாவது எண்-3 இல் பேட்டிங் செய்கிறார்.
கிரிக்கெட் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் விளையாடிய அல்லது விளையாடிக்கொண்டிருக்கும் இந்த பொஸிஷன் எந்த அணிக்கும் மிகவும் முக்கியமானது. எனவே அரையிறுதியில் அவரது பேட் உறுதியான அதிரடி இன்னிங்ஸை ஆடுவது அவசியம்.
மறுபுறம், ரிச்சா கோஷ் அயர்லாந்திற்கு எதிராக எந்த ரன்னையும் எடுக்கவில்லை. ஆனால் அதற்கு முந்தைய மூன்று போட்டிகளில் அவர் ஆட்டமிழக்காமல் 31, 44 மற்றும் 47 ரன்கள் எடுத்தார்.
34 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ரிச்சா, மெல்ல மெல்ல நம்பகமான பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல், போட்டியின் போக்கை மாற்றும் திறன் கொண்டவராகவும் ஆகிவருகிறார். இந்த வேகமான கிரிக்கெட்டில் அவரது ஸ்டிரைக் ரேட்டான 135.55ல் இருந்து இது தெரிகிறது.

இந்திய வீராங்கனை ரேணுகா சிங் தாக்கூர் கிரிக்கெட்டில் தனது பெயரை உயர்த்தும் வகையில் பந்துவீசி வருகிறார்.
தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் தனது பந்துகளில் அவருக்கு ஸ்விங் கிடைக்கிறது. மிகப்பெரிய பேட்ஸ்மேன்களை திணறச்செய்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி வருகிறார்.
இமாச்சலப் பிரதேசத்தின் ஷிம்லாவைச் சேர்ந்த ரேணுகா தாக்கூர், தனது வாழ்க்கையில் 31 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி அதே எண்ணிக்கையிலான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ரேணுகா இந்த உலகக் கோப்பையின் முதல் நான்கு போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 15 ரன்கள் கொடுத்து 5 பேரை அவுட் ஆக்கினார்.

இதன் மூலம், டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக ஐந்து விக்கெட்டுகளை (மகளிர் அல்லது ஆண்) வீழ்த்திய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
ரேணுகாவின் இந்த ஸ்விங் பந்துகள் விக்கெட்டைத் தாக்கும் போது அவை பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். அவர் அரையிறுதியிலும் எதிரணியை திணற அடித்து விக்கெட்டுகளை சாய்ப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்தப் போட்டியில் இதுவரை இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்திய நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் பூஜா வஸ்ரகருக்கும் இது பொருந்தும்.
இந்தப் போட்டியில் தனது 100 விக்கெட்டுகளை நிறைவு செய்து அனுபவமிக்க பந்துவீச்சாளராக திகழும் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மாவும் அணியில் இருக்கிறார். இந்தப் போட்டியில் இதுவரை அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய வீராங்கனைகளின்ஆட்டத்திறனைப் பொருத்து அரையிறுதியின் முடிவு இருக்கும்.