அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விதிகளை மீறியதற்காக இந்திய அணி பந்துவீச்சாளர் ஜடேஜாவுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஜடேஜா அற்புதமான மறுபிரவேசம் செய்த சற்று நேரத்திலேயே பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியிருந்தார்.
டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா அவரது விரலில் எதையோ தடவியுள்ளதினை கவனித்த அவுஸ்திரேலிய ஊடகங்களும் கிரிக்கெட் அணி இரசிகர்களும் அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தன.

இந்நிலையில்,சிராஜிடமிருந்த கிரீமை தன் இடக்கை சுட்டு விரலில் ஜடேஜா தேய்த்துக் கொண்ட காணொளி சமூக வலைதளங்களில் வெளியானது. இருப்பினும், ஜடேஜா தனது விரலில் வலி நிவாரணி கிரீம் தடவிக்கொண்டிருந்ததாக இந்திய அணி விளக்கம் அளித்துள்ளது.
இருப்பினும் விதிமுறைகளின் படி, மருந்தை பயன்படுத்துவதற்கு நடுவர்களிடம் அனுமதி பெறவேண்டும். பந்தை சேதப்படுத்தப்படாமல் இருப்பதற்காக இந்த விதிமுறை அமலில் உள்ளது. ஆனால், நடுவர்களின் அனுமதியை பெறாமல் இந்த செயலை செய்ததற்காக ஜடேஜா மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் ஊதியத்தில் 25 சதவீதத்தை அபராதமாக செலுத்தவேண்டும் என ஐசிசி கூறியுள்ளது.